சிறுகதைத்தொகுதிகள்
 |
நூலின்பெயர்: மனக்காற்றாடி
வெளியானஆண்டு: நவம்பர்1964
பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்
|
இச்சிறுகதைகள் நம்மைச் சுற்றி நடக்ககூடிய நிகழ்ச்சிகளையே சலிக்காமல் அலுக்காமல் சுவைபட இனிய எளிய தெளிவான நடையில் எழுதியுள்ளமை படித்து மகிழும்படியாய் யுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தின் இன்றைய பிரதிபலிப்பு என்ன என்பதை முதற் சிறுகதையான "அழைப்பிதழ்" மூலம் விளக்குகிறார். மனித மனம் ஒரு காற்றாடி.சந்தர்ப்பச்சூழ்நிலை என்னும் காற்று வீசும் பக்கமெல்லாம் பறக்கும் விசித்திரமான காற்றாடி! மொத்தத்தில் பத்துக் கதைகளும் ஆசிரியரின் எழுத்துத் திறமைக்கும், கற்பனைத் திறத்திற்கும், நடையழகிற்கும் சான்று கூறும்படி விளங்குகின்றன. அணிந்துரை - திருமிகு நா.பார்த்தசாரதி
 |
நூலின்பெயர்: கொன்றைப்பூ
வெளியானஆண்டு: ஜூன் 1972
பதிப்பகம்: பாப்பா பதிப்பகம்
குறிப்புகள்: 'அத்திப்பூ' நாடகம் 11- ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது(1978) | |
புலவராயிருந்தாலும் புரியும் தமிழில் எழுதுவதால் இவர் டாக்டர் மு. வரதராசனாருக்கு நிகராக விளங்குகிறார்.கதை சொல்லும் அவருக்கு இவர் சளைக்கவில்லை. இவர் எந்தச் சாராரையும் சேராமலும் சாடாமலும் எழுதுவது போற்றத்தக்கது. எல்லா கதைகளுமே ஒரு பூவைக்குறிப்பிட்டு அந்தப் பூவின் குண நலங்களோடு கதாபாத்திரத்தின் குணநலன்களை ஒப்பிட்டு எழுதி இருப்பது ஒரு புதுவகை! புலவர்களால் மட்டுமே செய்யக்கூடிய புதுமை! மற்றவர்கள் சொல்லக் கூசும் குடும்ப விவகாரங்கள் சிலவற்றை, இவர் தம் கதைகளுக்குக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அதனால் நெருப்பை நெருப்பு என்று சொல்வது தவறும் இல்லை.எழுத்தாளன் சக்தி வாய்ந்தவனுக்கூட! இல்லை யென்றால், எத்தனையோ விதமான எதிர்ப்புகள் ‘கிலிக்குள்’ நிறைந்த எழுத்தாளர் உலகில் இந் நூலாசிரியரே இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியுமா என்ன? அணிந்துரை - திருமிகு விந்தன்
 |
நூலின்பெயர்: அறுசுவை
வெளியானஆண்டு: ஆகஸ்டு1979
பதிப்பகம்: சேகர் பதிப்பகம் |
பழகுவதற்கினிய பண்பாளராகிய தாமரைக்கண்ணன் கவிதை,கட்டுரை,கல்வெட்டு ஆய்வு என்று இலக்கியம்,வரலாறு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதோடு நாடகம், நாவல்,சிறுகதைகளிலும் அவர் தம்திறமையான ஆற்றலைத் தெளிவாகப்புலப்படுத்தி வருகிறார். ஆர்வமுடன் அறிவுத்துறை,கலைத்துறை,கல்வித்துறை ஆகியவற்றிலெல்லாம் ஈடுபட்டு வெற்றி விளைத்துச் சுற்றியிருப்போரைச் சுகம் பெறச் செய்திடும் இவர்தம் ஆற்றலே ஆற்றல்.சிந்தனை வளர்ச்சிக்கும் சிறந்த வாழ்க்கை நோக்கிற்கும் துணைபுரியும் இந்த அரிய சுவைகளை...அறுசுவைக் கதைகளைப் படித்து மகிழுங்கள். பதிப்புரை - கலைஞர் கோ.வெள்ளையாம்பட்டு சுந்தரம்
 |
நூலின்பெயர்: ஏழுநாள் வெளியானஆண்டு: ஆகஸ்டு1978 பதிப்பகம்: சேகர் பதிப்பகம் |
வேளைக்கொரு பேச்சும் நாளுக்கொரு போக்கும் கொண்டவர்களாக வாழும் மக்களை சூழக்கொண்டது இச்சமுதாயம்.கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், இலட்சியம் என்றும், வெவ்வேறு நிலையில் வாழ்வைத் தொடர்வோர் வாழும் நாட்டில் நாமும் அடக்கம். மனித வெள்ளத்தில் நாமும் ஒரு துளி! நம்மையே அறியவும், நம் சுற்றுச் சூழலை அறியவும்,கதைகள் கண்ணாடியாகி முன்னோடி வந்து நிற்கின்றன. தருபவர் திறனாளர்; பெறுபவர் சுவைக்கலாம்; நெஞ்சில் வைத்து நித்தமும் எண்ணி இன்புறலாம்.முத்தான வாழ்க்கையைச் சித்தரித்தளித்த முத்தமிழ் வித்தகராம் புலவர் தாமரைக்கண்ணன் பாராட்டுக்குரியவர். பதிப்புரை கலைஞர் கோ.வெள்ளையாம்பட்டு சுந்தரம்
 |
நூலின்பெயர்: எல்லாம்இன்பமயம் வெளியானஆண்டு: டிசம்பர்1984 பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் | | | |
அன்பர் தாமரைக்கண்ணனின் இந்நூலில் பாவேந்தர் பாரதிதாசன் படைத்துள்ள ‘குடும்ப விளக்கை’ப் போல, இதை ஓர் உரைநடைக் குடும்ப விளக்காகப் படைத்து உருவாக்க முயன்று வெற்றி பெற்று இருக்கிறார், தாமரைக்கண்ணன். புதுமணத் தம்பதியருக்குப் பரிசளிக்க மிகவும் பொருத்தமான நூல்! சொல்ல வேண்டிய பயனுள்ள செய்திகளை வறட்டு அறிவுரையாக நேரிடையாகச் சொல்லாமல், மாதவன் மாதவி அடையும் அநுபவக் கதை போல விவரித்திருக்கும் உத்தி நயமானது.ஒரு குடும்பத்தின், தனித்தனி அநுபவக் கதைகள், பல குடும்பங்களுக்கும் பயன்படுகிற விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. தம்மைக் காளமாக அமைத்துக் கொண்டு ஆசிரியர், பல குடும்பங்களுக்கான பயனுள்ள அறிவுரைகளைத் தேனில் மருந்து குழைத்துக் கொடுப்பதுபோல் கொடுக்க உதவியுள்ளார், இந்தப் புது முறைக் கதைகளை வாழ்த்துகிறேன். எழுதிய ஆசிரியரையும் படித்துப் பயனடையக் காத்திருக்கும் தமிழ்ப் பெருமக்களையும் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூற வேண்டும்! அணிந்துரை - டாக்டர் தீபம் நா. பார்த்தசாரதி
 |
நூலின்பெயர்: உயர்ந்தஉள்ளம் வெளியானஆண்டு: டிசம்பர் 1984 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
என் அன்பு இளவல் தாமரைக்கண்ணன் அவர்கள் எழுத்துலகில்,ஒரு விடிவிளக்கு! இயல், இசை,நாடகம்ஆகிய முத்தமிழிலும் வல்லவர்! எழுத்துலகில் இவர் நாடறிந்த ஒரு பூஞ்சோலை! இவர் தம், நெஞ்சத் தடாகத்தில் பூத்த ஏழு அரிய கதை மலர்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் ஆர்வமுடன் படித்தேன்; சுவைத்தேன்! கதைகளிலே விறுவிறுப்பு...ஆற்றொழுக்கான நடை...நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் உரையாடல்...நகைக்சுவை எல்லாம் நிறைந்த சுவைக் கட்டி இந்த இலக்கியம்! படித புலவர் அவர்கள் இது போன்ற இலக்கியங்கள் மட்டும் அன்றிச் சிறந்த ஆராய்ச்சித் திறம் வாய்ந்த நுண்மாண் நுழை புலம் உடையவர். இவர் இது போன்ற இலக்கியங்கள் பல எழுதி ஆசிரியர் சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெற்றுத் திகழ்வாராக! அணிந்துரை - புலவர். தணிகை உலகநாதனார்
 |
நூலின்பெயர்: கனவுக்கண்கள் வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் குறிப்புகள்: அமுதசுரபி, மாலைமுரசு, மன்றம், குயில், காதல், போர்வாள், மல்லி ஆகிய இதழ்களில் இக்கதைகள் வெளிவந்துள்ளன |
சிறுகதைகள், இதயத்தைச் சுண்டி இழுக்கும் சாட்டை நுனிகள்...மனித எண்ணங்களின் வடிகால்கள்... இருண்ட வாழ்க்கைக்கு ஒளி தரும் கற்பூர தீபங்கள்... வடிவம், உத்தி, உரு, கரு அனைத்தும் ஒரு சேர சிறுகதையை உருவாக்குவது, தனிக்கலையாகும். அக் கலையில் சிறந்து விளங்கும் திரு.தாமரைக்கண்ணன் அவர்களின் பன்னிரண்டு சிறுகதைகள். இந்நுலில் இடம்பெற்றுள்ளன. பதிப்புரை - திருமிகு மா.அரங்கநாதன்
 |
நூலின்பெயர்: நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை முதலான அழியும் ஆசைகளில் எவன் மூழ்கி மயங்காமல் அவற்றைக் கால் தூசாகப் பல வாய்ப்புகளில் எவன் உதறி எழுந்த உத்தம குணங்கள் உடையவனோ,அவன் எழுதினான்! உண்மை... அஞ்ஞானிகளின் இடையே சிக்கித் தனித் தன்மையுடன் வாழும், ஞானியே, அவன்! அது உண்மையானால், மெய்ஞானத்தைப் பற்றி எழுதாமல் அவன் ஏன் இந்த உலகப் பற்றுள்ள நூலை எழுதினான்? மாந்தர் மனத்தின் கீழ்நிலைகளையும் மேல்நிலைகலையும் துல்லியமாக உணர்வதும் பிறர் உணரச் செய்வதும்கூட மெய்ஞ்ஞானத்தின் படிகள் அவன் உடல் இந்த உலகில் நடமாடி, உண்டு,உறங்கி வாழ்வதால்... அவன் இந்த நூலை எழுதினான்! அவனுக்குத் தெரியும்... மனித மனம் உள்ள வரை,இந்த நூல் வாழும்! அன்பின் தாமரைக்கண்ணன்.
நாடகங்கள்
 |
நூலின்பெயர்: சங்கமித்திரை வெளியானஆண்டு: ஆகஸ்டு1982 பதிப்பகம்: விசாலாட்சி பதிப்பகம் குறிப்புகள்: தமிழகஅரசின்பரிசுபெற்றது(1984) |
இதோ தமிழில் ஒரு புதிய நாடகத்தொகுப்பு! ஆசிரியர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் ஆக்கித் தந்திருக்கிறார், அழகிய நாடகத் தோப்பு! ஐந்து நாடகங்கள்!! வரலாற்று நிகழ்ச்சிகளையும் சரித்திரச் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனது கற்பனை வளத்தால் விசாகையை நாடகமாக்கியிருக்கும் பங்கு போற்றத் தக்கது! சுருக்கமான கருத்துக்கள், நீண்டு போகாத வசனங்கள், தடைபடாத ஆற்றொழுக்கு நடை இவற்றால் புத்தர், அசோகர், சாக்ரடீஸ், அவ்வையார், அதியமான் போன்ற சரித்திரப் புருஷர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாடகங்களை இயற்றியிருக்கிற ஆசிரியர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் நிறைய நாடக நூல்களையும் நாவல்களையும் படைத்து நாட்டுக்கு அளித்திருக்கிறார். அவருடைய படைப்பில் இது ஒரு புதுமைத் தொகுப்பு! இனி அவரின் இலக்கிய வளர்ச்சி ஒரு தோப்பாகப் பெருகட்டும்! அணிந்துரை - திருமிகு ஏ. நடராஜன்
 |
நூலின்பெயர்: கிள்ளிவளவன்
வெளியானஆண்டு: 1960
பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்
குறிப்புகள்: ‘கொடைவள்ளல் குமணன்’ நாடகம் 12-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது |
இந்நூலில் ஐந்து ஓரங்க நாடகங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் " நிலாச் சோறு" என்னும் நாடகம், நம் சமுதாய வாழ்க்கையில் காணப்படும் சில குறைபாடுகளை அலசி ஆராய்ந்து காட்டும் கற்பனை ஓவியமாகும். ஏனைய நான்கு நாடகங்களும் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எல்லா நாடகங்களும் பள்ளிக்கூட மாணவர்கள் நடிப்பதற்கு ஏற்ற வகையில், அவர்களுடைய உள்ளப்பாங்கை உணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. இந்நூல் ஆசிரியர் திருவாளர். தாமரைக்கண்ணன் அவர்கள் மாணவ மணிகளோடு பல்லாண்டுகளாக நெருங்கிப் பழகியிருப்பதால் அந்த அனுபவ முத்திரை ஒவ்வோர் நாடகத்திலும் நன்றாக பதிந்துள்ளது. - பதிப்புரை
 |
நூலின்பெயர்: வெண்ணிலா வெளியானஆண்டு: ஜனவரி 1963 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
வளர்ந்துவரும் புதிய சமுதாயப் பூங்காவில் மலர்ந்து வரும் இளம் குழந்தைகளின் கூறிய நுண்ணறிவும் சீரிய திறமைகளும் வியந்து பாராட்டுதற்கு உரியவை. அவர்களுடைய உடல் உள்ளம் ஆத்மா ஆகிய மூன்றும் ஒருமித்த சீரான வளர்ச்சியடையும் வண்ணம் கல்விநிலையும் சூழ்நிலையும் உறுதுணையாக அமைந்துவிட்டால், அறிவும் அமைதியும் நிறைந்த இலட்சிய உலகினைச் சமைப்பார்கள்! அந்த இளம் பூங்கன்றுகளை அவற்றின் இயல்பான தனித்தன்மையுடனும் மிக்க கவனத்துடனும் வளர்த்தால் பின்னர்,அவை பல இடங்களிலும் பரவி நின்று பூவுலகு எங்கும் நறுமணம் பரப்பும். இப்படி அடுக்கடுக்கான இன்பக்கனவுகள் என் நெஞ்சில் மலர்ந்தன. அந்தக் கனவுகளின் இடையில் பூத்துப் புன்னகை செய்தவள்தான். - தாமரைக்கண்ணன்
 |
நூலின்பெயர்: அலெக்ஸாண்டர்
வெளியானஆண்டு: ஏப்ரல் 1963
பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
இந்த நாடகத்தைத் தந்துள்ள நண்பர் தாமரைக் கண்ணன் சிறந்த சிறுகதைகளையும் ஒற்றையங்க நாடகங்கள் பலவற்றையும் பெரிய நாடகங்கள் சிலவற்றையும் எழுதிப் பேரும் புகழும் பெற்றவர். இவர் எதிர்காலத்தில் நல்ல பெரிய நாடகாசிரியராக விளங்கப் போகிறார் என்பதற்கு நாடக இலக்கணங்களை மனத்தில் கொண்டு வெற்றிகரமாகத் தீட்டப்பட்டுள்ள இந்த அணிந்துரை - பேராசிரியர் நாரண. துரைகண்ணனார்
 |
நூலின்பெயர்: மருதுபாண்டியர்
வெளியானஆண்டு: பிப்ரவரி 1963
பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட செந்தமிழ் நாட்டில்தான்,வெள்ளை வணிகரால் முதன் முதலாக பாரதத்தாயின் கால்களுக்கு அடிமைத்தளை இறுகப் பூட்டப்பட்டது. சுதந்திர வாழ்விற்காகவும் தன்மானத்திற்காகவும் போரிட்டுப் புகழ் எய்திய வீரத் தமிழர்களாகிய பெரிய மருது...சின்னமருது ஆகிய இருவரது வாழ்கை வரலாறு இங்கே நாடக வடிவில் சுவையுடன் தரப்பட்டுள்ளது. வீரர்களின் வரலாற்றினைப் படிக்கும்போதும் நாம் நம்முடைய பண்பாட்டை பெருமையை உணர்கிறோம்.புனிதம் நிரம்பிய இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தகைய உணர்வும் சக்தியும் உற்சாகமும் இன்றைய நிலையில் அதிகம் தேவை. அந்தத் தேவையை இந்த நாடகம் ஒரளவு நிறைவு செய்யும் என்பது என் நம்பிக்கை. - தாமரைக்கண்ணன்
 |
நூலின்பெயர்: சாணக்கியன்
வெளியானஆண்டு: டிசம்பர் 1992
பதிப்பகம்: திருமேனி நிலையம் |
இந்நாடகத்தின் உரையாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. மிகச் சிறந்த முறையில் இலக்கிய நயம்செறிந்து விளங்குவது பாராட்டுக்குரியது.சாணக்கியனைத் திரைப்படமெடுக்க விரும்புபவர்கள் இந்நாடகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து. இவர் நாடகம் ஆக்கும் துறையிலே நல்ல ஆற்றல் வாய்ந்தவராகக் காணப்படுகிறார். இவரின் நாடகமுயற்சிகளை வரவேற்பதன் மூலம், நல்ல மேடை நாடகங்களும், இவரிடமிருந்து தமிழர்க்குக் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். திரு தாமரைக்கண்ணரின் நாடகப் புலமை வாழ்க! அணிந்துரை - அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள்
 |
நூலின்பெயர்: கைவிளக்கு
வெளியானஆண்டு: நவம்பர்1979
பதிப்பகம்: இலக்குமி நிலையம் |
உலக குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு பல நூல்களை சிறுவருக்கு உகந்த இவ்வாண்டில் வெளியிட்டுள்ளோம். இருந்த போதிலும் சிறுவர் சிறுமிகளுக்கு நல்லறிவு நற்போதனையைப் புகட்டும் சிறந்த நாடக நூல் ஒன்று வெளியிட விரும்பி திரு.தாமரைக்கண்ணன் அவர்களிடம் கேட்டதற்கு இணங்க இந்த சிறந்த நாடகத்தை தந்தார்கள். இந்த நாடக நூலை வெளியிடுவதில் பெருமகிழ்வு அடைகிறோம். பதிப்புரை
 |
நூலின்பெயர்: பேசும்ஊமைகள்
வெளியானஆண்டு: டிசம்பர் 1984
பதிப்பகம்: மணியம் பதிப்பகம் |
பெண்மைச் சிறப்பினையும் எழுதற்கரிய நுண்ணிய மனஇயலினையும் ஒன்று சேர்த்து சிறந்த உரையாடல்களுடன் நல்ல தமிழில் கொடுத்திருக்கும் நாடக ஆசிரியர் திரு.தாமரைக்கண்ணன் அவர்களுடைய கைவண்ணம் போற்றத்தக்கது. அவருடைய சமுதாய சீர்திருத்தம் நிறைந்த இந்த மன இயல் நாடகம் நாட்டு மக்களுக்கு நல்ல விருந்து. அணித்துரை - டாக்டர்.கே. வி,தாட்சாயணி ஜனார்த்தனம்
 |
நூலின்பெயர்: நல்லநாள்
வெளியானஆண்டு: டிசம்பர்1984
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
எழுத்தாளர்களுக்குச் சமுதாயப் பொறுப்பு மிகுதி ‘தங்கள் எழுத்துகள் சமுதாயத்தை நன்னெறிப்படுத்துதல் வேண்டும்’ என்னும் உயர்ந்த நோக்கத்துடன் எழுதும் எழுத்தாளர்களே பாராட்டுதற்கு உரியவர்கள். அத்தகைய பாராட்டினை, புலவர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் இந்நூலின் மூலம் பெறும் தகுதியைப் பெற்றுள்ளார். இன்றைய இளைஞர்கள் பிற்காலத்தில் பண்பு நிறைந்த உயர்ந்த மனிதர்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூலில் ஆறு ஓரங்க நாடகங்களைத் தந்துள்ளார்கள். உலகப் பொது மறையாகிய திருக்குறளின் கருத்துகளை மையமாகக் கொண்டு, அனைவரையும் கவரும் வகையில் நாடக ஆசிரியர் இந்த நாடகங்களை எழுதியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. இதுபோன்று குறட்பாக் கருத்துகளை அமைத்து எழுதப் பெற்ற நாடக நூல்களுள் இதுவே சிறந்தது என்று கூறுவது மிகையாகாது. ஆண்கள் பெண்கள் பள்ளிகளிலும் இலக்கிய மன்றங்களிலும் நடித்து மிகழ்வதற்கு ஏற்றமுறையில் இந்த நாடகங்கைள எழுதியுள்ளார். இவற்றை அனைத்து இடங்களிலும் மேடை ஏற்றினால் மாணவர் உலகம் நல்ல பயனைப் பெறும்; எதிர்கால சமுதாயமும் ஏற்றம் பெறும்! அணிந்துரை - திருக்குறளார் வீ. முனிசாமி
 |
நூலின்பெயர்: நல்லூர் முல்லை
வெளியானஆண்டு: டிசம்பர்1985
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம்
குறிப்புகள்: கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது |
நண்பர் தாமரைக்கண்ணனார் ஒரு நல்லாசிரியர்; பலதுறைப் புலமை பெற்று மிளிர்பவர்; படைப்பாற்றல் மிக்க பல்கலைக்குரிசில்! சொல்வரவு சான்ற தமிழுக்குத் துறை தோறும் புது வரவு பெருக்கி வரும் புகழாளர்! இவரின் படைப்புகள் வளர்கின்ற இளைய நெஞ்சம் முதல் அறிஞர்களின் ஆராய்ச்சி உள்ளம் வரை இடம் பெற்று விளங்கும் திறங் கொண்டு திகழ்பவை! பல்துறைப் பணிகளிலும் நாடகப் படைப்புகள் இவர் புலமைப் புகழுக்கு ஏணியாகும்! இவர் தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டின் தலை சிறந்த நாடகப் பேராசியர் என்ற பாராட்டுதலையும் பெற்றுள்ளார். இந்த நாடகத்தில் ஆசிரியரின் கைவண்ணம் உள்ளத்தைத் தொடுகின்ற நிகழ்ச்சிகளை மேலும் கவினுறச் செய்கிறது. எளிமையும் இனிமையும் குலவும் தமிழ் நடை எங்கும் சுடர் விடுகிறது..... தாமரையின் பணி மேலும் சிறக்கவும் புதிய பொன்னேடுகள் பல அவர் புகழுக்குச் சேரவும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! அணிந்துரை - டாக்டர் ஒளவை நடராசனார்
 |
நூலின்பெயர்: வளையாபதி
வெளியானஆண்டு: டிசம்பர்1985
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
நண்பர் நாடகமாமணி டாக்டர் புலவர் தாமரைக்கண்ணன் ஆவார். பல்வேறு துறைகளில் ஈடுபாடு காட்டித் தம் அறிவாற்றலை அனைவருக்கும் பயன்படுமாறு செய்து வருபவர், இவர்; எழுத்துக் கலை மூலமாகத் தமிழகத்திற்கு இவர் ஆற்றி வரும் பணிகள் மிகப் பல! சிந்தனையைத் தூண்டும் சீரிய உரையாடல்கள் நூல் நெடுக அணி செய்தலைக் காணலாம்.. திட்பமும் நுட்பமும் அமைய நாடகங்களை இயற்றித் தருவதில் வல்லவர் இவர் என்பதை இவை தெளிவு படுத்துகின்றன.இத்தகைய அரிய நாடகங்களைத் தொடர்ந்து தமிழுலகத்திற்குத் தர வேண்டும்; வீழ்ந்து கிடக்கும் தமிழ் நாடகத்தினை வீறுடன் தலை நிமிர்ந்து நிற்கச்செய்தல்வேண்டும்; இஃது இவர் முயற்சியால் நிறைவேறக் கூடியதே! தமிழுலகமும் இதனை எதிர் நோக்கியுள்ளது. அணித்துரை - டாக்டர் இரா. குமரவேலர்
 |
நூலின்பெயர்: இரகசியம்
வெளியானஆண்டு: நவம்பர்1991
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
கிராமம் என்றால் வெறும் வயல்களும்,வரப்புகளும்,தோப்புகளும் மட்டும்தானா? அவற்றில், மனிதர்களின் தசைகளும், இரத்தங்களும்,இதயங்களும் ஜீவ எருக்களாக இருக்கின்றனவே...! அவை உயிர் ஊற்றுகளாகி அடி நீராகி பாய்ச்சப்படுகிறனவே! அந்த அடித்தளத்தின் ஒவ்வொரு நுட்பத்தையும் பொறுமையாக ஆராய்ந்து ஒரு "புது ராகம்" இசைக்கிறார்,தாமரை! சராசரி கிராம வாழ்க்கையிலுள்ள அவலங்கள், போராட்டங்கள்,நம்பிக்கைகள்,விசுவாசப் பிரகடனங்கள்,வேறுபாடுகள் அனைத்தையும் ஒரு திரைப்படத் தொகுதியைப் போல, இவர் தம் நாடகங்களில் தெளிவு படுத்தியிருக்கிறார்! இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் கற்றுத் துறை போகிய இந்த நாடகச் சித்தரின்,இந்த ஓரங்க நாடகக் கனிகள் சுவைக்க அருமை! அணிந்துரை - கலைஞர் சக்தி வசந்தன்
 |
நூலின்பெயர்: பள்ளிக்கூடம்
வெளியானஆண்டு: ஏப்ரல் 1989
பதிப்பகம்: திருமேனி நிலையம் |
வீட்டுச் சூழலை விட ..சுற்றுப்புறச் சூழலை விட..பள்ளிக்கூடச் சூழலே, மாணாக்கரின் எதிர்காலத்தை வரையறுப்பதில் அதிக வல்லமை படைத்தது என்பது எனது கருத்து.! பேரறிஞர்கள்,பெருங்கலைஞர்கள்,பெருந்தலைவர்கள், ஆன்மிக ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொள்வர்.! வெளி உலகத்தில் பல திறப்பட்ட உணர்வுகளும் மனப் போக்குகளும் உடைய மனிதர்கள் வாழ்வதைப் போலவே, பள்ளிக்கூடத்திலும் பல்வேறு குண இயல்புகளை உடைய மாணாக்கர் ஒன்று சேர்ந்து பழகுகிறார்கள்; கல்வி பயில்கிறார்கள்.பள்ளிக்கூடம் மாணாக்கரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, அவர்களைப் பிற்காலத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கும் புனித ஆசிரமும் ஆகும். - தாமரைக்கண்ணன்
புதினங்கள்
 |
நூலின்பெயர்: தங்கத்தாமரை
வெளியானஆண்டு: ஆகஸ்டு1962
பதிப்பகம்: வள்ளுவர் பண்ணை |
 |
நூலின்பெயர்: மூன்றாவதுதுருவம்
வெளியானஆண்டு: நவம்பர் 1970
பதிப்பகம்: ஸ்டார் பிரசுரம் |
மனிதனின் இலட்சியக் கனவுகள் எண்ணற்றவை. ஆனால் அந்தக் கனவுகள் கலைஞனுக்கு ஏற்படும்போது அவை கலை உருவில் வடிவம் எடுக்கின்றன.அத்தகைய இலட்சியக் கனவுகளின் உருவகமாக எழுந்தவையே இந்த மூன்று குறுநாவல்களும்.ஆசிரியர் தாமரைக்கண்ணன் அவர்கள் சரளமான எளிய இனிய தமிழில் மூன்று சிறந்த கருத்தோவியங்களைத் தந்துள்ளார்.தமிழ் வாசகர்களின் பாராட்டை நிச்சயம் பெறும் என்ற ஆர்வத்துடன் இதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.பதிப்புரை - கண. இராமநாதன் ஸ்டார் பிரசுரம்
 |
நூலின்பெயர்: நெஞ்சின் ஆழம்
வெளியானஆண்டு: மார்ச் 1979
பதிப்பகம்: மருதமலையான் |
பல தரப்பட்ட குணங்களை யுடையவர்கள் ஒன்று சேர்ந்து செல்கின்றபோது ஏற்படும் சுவையான சம்பவங்களை வைத்து அருமையான நாவலாக எழுதி இருக்கிறார் நண்பர் தாமரைக்கண்ணன் அவர்கள். கீசகன், சகுனி, துரியோதனன் போன்ற பெயர்களில் கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களின் குணாதிசயங்களையும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் விளக்கி இருக்கும் விதம் படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது. அப்பாவிக் கவிராயரும் அவ்வப்பொழுது தன்னைக் கவிஞர் என்று காட்டிக்கொள்ள அவர் வாயாலேயே "நான் கவிஞன் ஐயா" என்று சொல்வதைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புத்தான் வருகிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இந்தநாவலை வாசகர்களாகிய உங்கள் முன் படைத்திருக்கிறோம்.பதிப்புரை - லெ. இராமநாதன்
 |
நூலின்பெயர்: பன்னீர்சிந்தும்பனிமலர்
வெளியானஆண்டு: அக்டோபர் 1983
பதிப்பகம்: நறுமலர்ப் பதிப்பகம் |
இந்த நாவலில் மரணதண்டனை பற்றிய பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. புலவர் தாமரைக்கண்ணன் சிறந்த ஆராய்ச்சியாளர் பழங்காலக் கல்வெட்டுகளிலிருந்து, ஆராய்ந்து சரித்திர உண்மைகளை வெளியிடுபவர்; இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர்; நாவலாசிரியர்; நூல் பதிப்பாளர்; கட்டுரையாளர்; சொல்லப் போனால் பல்கலைக் கலைஞர்! கதையின் இடையிலேயே இன்றைய சமுதாயத்தின் போக்கும் மக்களின் பழக்க வழக்கங்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இந்தப் புதினத்தில் வாசகர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய கருத்து உள்ளது. அன்பர் புலவர் தாமரைக்கண்ணன் அருவி போன்ற தமிழ் நடையும் நடுக்கடல் போன்ற கருத்து ஆழமும் தென்றல் போன்ற சிந்தனைக் குளுமையும் இந்த நவீனத்தில் கலந்திருக்கின்றன.கூரிய கத்தி ஒன்றின்மேல் நடப்பது போன்ற கொள்கையை விளக்கும் இந்த நாவல், ஆசிரியரின் ஆழ்ந்த சிந்தனையை, மக்கள்பால் அவருக்குள்ள அன்பைப் புலப்படுத்துகிறது. கற்பனை வளமும், தமிழ் ஆற்றலுமிருப்பதால் ‘பன்னீர் சிந்தும் பனிமலர்’ தேனையும் சிந்துகிறது.புலவர் தாமரைக்கண்ணனாருக்கு இந்தப் புதினம் பெரும் வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். அணிந்துரை - டாக்டர்விக்கிரமன்
 |
நூலின்பெயர்: நெஞ்சத்தில் நீ
வெளியானஆண்டு: டிசம்பர் 1987
பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் |
உயர்நீதி மன்றத்தில் நிதியரசராக விளங்கிய என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவோர் மிகவும் குறைவு. கல்வெட்டுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை எழுதுங்கள் ! என்றும் நிலைத்து நிற்பீர்கள் !" என்று கூறிவிட்டுத் "தெள்ளாற்றுக்குப் போய் வாருங்கள்!" அங்கே "குடிக்குறை தீர்த்த நாச்சியார்" என்ற பெண்,பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாயத்துத் தலைவியாக இருந்த வரலாற்றைச் சொல்வார்கள் என்றார்கள். நான் திருமூலட்டான நாதர் கோயிலில் இருக்கும் எல்லா கல்வெட்டுகளையும் படியெடுத்தேன். எனினும் தேடிய கதையின் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்தக் கதை பெண்மையின் ஆண்மையை கூறுவதாக இருந்ததால், கதையாகவும் எழுதினேன். - தாமரைக்கண்ணன்
 |
நூலின்பெயர்: அவள்காத்திருக்கிறாள்
வெளியானஆண்டு: டிசம்பர் 1982
பதிப்பகம்: பூவழகிப் பதிப்பகம்
குறிப்புகள்: கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது |
புலவர் தாமரைக்கண்ணன் அச்சிறுபாக்கத்தில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அதோடு அமைதியாக இலக்கியப் பணியும் ஆற்றிக் கொண்டிருக்கிறார்.சிறந்த நாவலாசிரியராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் தமிழுக்குத் தொண்டு செய்து வருகிறார். கிராமத்தில் வாழ்ந்து வரும் இவர், கிராமத்து மக்களின் மன நிலைமைகளைத் துல்லியமாக இந் நாவல் மூலம் நம்முன் கொண்டு வருகிறார். கிராம மக்களின் நடைமுறைகளையும் அவர்களின் பண்பு நலன்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்த நாவலின் பாத்திரங்களை நமது கிராமங்களில் இன்றும் காணலாம். இந்த நிலைகள் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறனவே தவிர, குறையவில்லை. இந் நாவல் அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. ஆசிரியரின் ஆற்றோட்டமான தமிழ்நடை, நாவலை வேகமாக இழுத்துச் செல்கிறது. சகோதரர் தாமைரக்கண்ணன் அவர்களுக்கு இந்த நாவல் மேலும் ஒரு வெற்றிடப்படப்ப்பு ஆகும். ஏதேதோ கதைகளைத் தேடி அலையும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்த நாவலையும் மக்களுக்கு அளிக்கலாமே; அதனால், பயனாவது ஏற்படும். நாட்டுக்கு ஒரு நல்ல செயலைச் செய்த நிறைவாவது ஏற்படும். அணிந்துரை - மூவேந்தர் முத்து
ஆய்வுநூல்கள்
 |
நூலின்பெயர்: வரலாற்றுக்கருவூலம்
வெளியானஆண்டு: டிசம்பர் 1984
பதிப்பகம்: சேகர் பதிப்பகம்
குறிப்புகள்: தமிழகஅரசின்பரிசுபெற்றது (1985) |
திரு. தாமரைக்கண்ணனின் புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு இவரை பாராட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல.....அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று இவர் ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும். இப்பகுதியில் கிடைத்த வீரகேரளன் காசு பற்றியும், ஒரத்தி எனும் ஊரில் தந்திவர்மன், கன்னரேதவன் ஆகிய அரசர் கல்வெட்டுகளும் கண்டுபிடித்து உதவியிருக்கிறார். அரியவற்றைக் கண்டுபிடிப்பவராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் இவர், நல்ல பேச்சாளர் பல நூல்களை யாத்துச் சிறந்து வருகிறார்..... இவர் எழுதியுள்ள ‘வரலாற்றுக் கருவூலம்’ நூலின் பயனாய் இப்பகுதியின் வரலாற்றை, புகழ் வாய்ந்த கோயில்களின் சிறப்பை, இதுகாறும் யாரும் அறியாத கோயில்கள் பற்றிய செய்தியைத் தெளிவாகவும் எளிமையாகவும் சான்றுகளுடன் அறிய அயலும்.இவர் இது போன்ற பல நூல்களை எழுதிச் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன். அணிந்துரை - டாக்டர் இரா. நாகசாமி
 |
நூலின்பெயர்: வரலாறுகூறும்திருத்தலங்கள்
வெளியானஆண்டு: ஏப்ரல் 2006
பதிப்பகம்: மூவேந்தர் பதிப்பகம் |
திருக்கோயில்களின் வரலாற்றுண்மைகளைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறப்புறப் பதிவு செய்துள்ள புலவர் தாமரைக்கண்ணன் அவர்களின் பணி, பாராட்டுதற்குரியதாகும். இந்நூலில் அமைந்துள்ள சொல்லாய்வுகள் சுகந்தருகின்றன. வரலாற்று உண்மைகள் வியப்புக்கே விருந்தளிக்கின்றன.கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களையும் தொடர்களையும் உள்ளபடியே தந்து, பொருள் தொடர்பு விடுபட்டுப் புரியாத இடங்களில் விளக்கங்களைத் தந்து, பல இடங்களில் விழியுயர்த்தி வியக்க வைக்கிறார். குந்தவைப் பிராட்டியார் போன்றோர் கொடைத் திறன்களையும், கோயிற் தொண்டுகளையும்,தவறுகளுக்கான தண்டனைகள் கூடத் தக்க பயன் தரும் வகையில் அமைந்ததையும் தாமரைக்கண்ணன் விரிவாக விளக்கியிருப்பது தகவ்ல் களஞ்சியம்போல நமக்கு மிகுபயன் தருவதாகும். இவரது படைப்புத் திறனுடன், கல்வெட்டுக் கல்வி, வரலாற்றாய்வு, சொல்லாய்வு போன்ற பல்துறைத் திறனும் சிறப்புற வெளிப்பட்டு விளங்குகிறது இந்நூல். இன்னும் இத்தகு பயன்மிகு படைப்புகள் பலவற்றைப் புலவர் தாமரைக்கண்ணன் தொடர்ந்து தர வேண்டுமென்பது நம் விழையும் வேண்டுதலும். அணிந்துரை - டாக்டர் நா.ஜெயப்பிரகாஷ்
 |
நூலின்பெயர்: ஆட்சீசுவரர்திருக்கோயில்
வெளியானஆண்டு: ஏப்ரல் 1975
பதிப்பகம்: கோயில் விழாக்குழு |
திருக்கோயில் வரலாற்று நூல் ஒன்பதாம் நாள் விழாக்குழுவினர் மூலம் வெளிவருவதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறநிலையத்துறையும் அரசும் ஒவ்வொரு திருக்கோவிலிலும் தல வரலாறு மற்றும் திருக்கோவில் பற்றிய சிறு குறிப்பு ஆகியவற்றை வெளியிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள இவ்வேலையில் இந்நூல் வெளிவருகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருக்கோவிலின் பதிகங்கள், திருக்கோவிலின் கல்வெட்டுகள்,108 போற்றிகள்,திருப்பணிகள் என்றவாறு பல விவரங்களை இந்நூல் தன்னுள்ளே கொண்டுள்ளது இதன் சிறப்பாகும். அணிந்துரை - அ.சுப்பிரமணியன் செயல் அலுவலர்
வரலாற்றுநூல்கள்
 |
நூலின்பெயர்: கருணைக்கடல்
வெளியானஆண்டு: ஜூலை1963
பதிப்பகம்: சுகுணா பப்ளிஷர்ஸ் |
புத்தரின் மணிமொழிகள் உலகமெலாம் உணர்ந்து தெளிந்து அமைதியுடன் இன்புற்று வாழ வழிவகுப்பது...புத்தரின் வரலாற்றுப் புனைகதை. சான்றோரின் மணிமொழிகளை உணரும் போது நம்மை அறியாமலேயே நமது எழுதுகோல் வழியாகவும், நாவின் வழியாகவும் சிறந்த பொன்மொழிகள் உதிர்கின்றன. வீறு பெற்ற நமது பாரதத்தின் அருமைப் புதல்வர்கள்.. அருந்திறல் மிக்க மாணாக்கர்கள், வீடு பெற்ற புத்தரின் புனிதமான வரலாற்றைப் படிப்பதால் நல்ல சிந்தனைகளையும்... நல்ல எண்ணங்களையும்... நல்ல குணங்களையும்... நல்ல செயல்களையும் பெற்று முழுமனிதர்களாக விளங்குவார்கள் என்பது உறுதி. தாமரைக்கண்ணன்
 |
நூலின்பெயர்: திருநாவுக்கரசர்
வெளியானஆண்டு: ஜனவரி 1964
பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
உலக அரங்கிலேயுள்ள எல்லா நாவுகட்கும் அரசு, திருநாவுக்கரசு! இந்தப் பேர் சிபபெருமானே சூட்டியருளினார். ஆதலால், திருநாவுக்கரசர் மிகச் சிறந்த அருளாளர். இவருடைய வரலாற்றை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து இன்புற வேண்டும். அன்பர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் இனிமையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். இடையிடையே ஆளுடைய அரசுகளின் அமுதப் பாடல்களையும் அவற்றின் நுண்ணிய விளக்கங்களையும் அழகுற எழுதி விளக்கியுள்ளார்.அன்பர்கள் அனைவரும் இதனைப் படித்துப் பயன் பெறுவார்களாக!ஆசிரியர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் மேலும், பாலும் தேனும் போன்ற இனிய நூல்களை வெளியிட்டுத் தொண்டு புரிய எல்லாம் வல்ல இளம்பூரணனை இறைஞ்சுகிறேன். அணிந்துரை - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
 |
நூலின்பெயர்: ஒருமனிதன்தெய்வமாகிறான்
வெளியானஆண்டு: டிசம்பர் 1984
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
மனித சமுதாயம் திருந்தவேண்டும் என்பதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சான்றோர்கள் அரும்பாடு பட்டு வருகின்றனர். இருந்தும்,பொய்,பொறாமை,நயவஞ்சகமான பேச்சு முதலான தன்னலக் குணங்கள் மனிதனை விட்டு இன்று வரை கொஞ்சம் கூட நீங்கவில்லை. படிப்பும், நாகரிகமும் முதிர முதிர மனிதனின் தன்னலம் மிகுதியாகியே வருகின்றது.எனினும், உயர்ந்த சான்றோரின் வாழ்க்கைக் குறிப்புகள் நம் உள்ளத்தை நாள்தோறும் தொடர்ந்து தூய்மைப்படுத்தி வருகின்றன. அவர்களுள் காந்தியடிகள், புத்தர் இருவருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் புலவர் தாமரைக்கண்ணன் அவர்கள் சுவையாக எழுதி அளித்துள்ளார். தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளோடு அவர்கள் வாழ்க்கையைப் பொருத்திக் காட்டியிருப்பது தனிச் சிறப்புக்கு உரியது. பதிப்புரை - மா.அரங்கநாதன்
 |
நூலின்பெயர்: கருமாரிப்பட்டிசுவாமி
வெளியானஆண்டு: ஜனவரி 1987
பதிப்பகம்: ராதா ஆப்செட் பிரஸ் |
 |
நூலின்பெயர்: சம்புவரையர்
வெளியானஆண்டு: 1989
பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
இந்த நூல் சம்புவரையர் மரபினரின் சிறப்புகளையும் அவர்கள் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துக் கூறி சம்புவரையரை அறிமுகப்படுத்த வேண்டிய இன்றியமையாமை உள்ளது.அதனால், ஒரு சில நாள்களிலேயே எழுதி அச்சிடவேண்டியிருந்தமையால், என்னிடம் இருக்கும் சம்புவரையர்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்புகளையும் கூட இந்நூலில் முழுமையாகச் சேர்க்க முடியவில்லை. சம்புவரையர் காலத்தைப் பற்றித் தெளிவான ஆய்வுக் கட்டுரையை முதன்முதலில் எழுதியவர், நான் மதித்துப் போற்றும் ஆய்வு அறிஞர் கும்பகோணம் திரு என்.சேதுராமன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, சம்புவரையரைப் பற்றிய முழு நூலினை விரைவில் எழுதுவேன். - தாமரைக்கண்ணன்
அறிவியல்நூல்
 |
நூலின்பெயர்: வியப்பூட்டும் விண்வெளி்
வெளியானஆண்டு: மார்ச் 1992
பதிப்பகம்: திருமேனி நிலையம் |